மரத்தை சுத்தினா மார்க் கிடைக்கும்!

மரத்தை சுத்தினா மார்க் கிடைக்கும்!

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடராக இருந்தார். தன் குருநாதர் நம்மாழ்வாரைப் பாடி பரம்பொருளை அடைந்தார்.

இவர் அயோத்தியில் இருந்தபோது, தெற்கு திசையில் ஒரு ஜோதி இருப்பதைக் கண்டார். அந்த ஒளியைப் பார்த்து தெற்கு நடந்து சென்றார். தாமிரபரணிக் கரையோரம் வரை அந்த ஒளி அவரை ஈர்த்து வந்தது.

அப்பகுதி அக்காலத்தில் "குருகூர்' எனப்பட்டது. தற்போது ஆழ்வார்திருநகரி எனப்படுகிறது. இவ்வூர் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் உள்ளது. அங்கே ஒரு புளியமரப்பொந்தில் தவம் செய்து கொண்டிருந்தவரிடம் அந்த ஒளி கலந்துநின்றது. அவரே, ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார்.

"இவரது உடம்பில் எழுந்த பிரகாசமா அயோத்தி வரை தெரிந்தது!' என்று மதுரகவியாழ்வார் ஆச்சரியப்பட்டு நின்றார். கண்ணை மூடி அமர்ந்திருந்த அவரை எழுப்புவதற்காக கல்லை தூக்கி எறிந்தார். அவர் கண் திறந்து பார்த்தார். அவரே தன் குருநாதர் என்று முடிவுகட்டி சரணாகதி அடைந்தார். பதினோரு பாடல்களால் அவரைத் துதித்தார். பரம் பொருளைப் பாடாமல் பக்தரான நம்மாழ்வாரைப் பின்பற்றியே பரமபதம் அடைந்தார் மதுரகவியாழ்வார்.

இங்கு நம்மாழ்வாருக்கு கோயில் அமைந்துள்ளது. அவர் தவம் செய்த புளியமரமும் கூட புளியாழ்வார் என்றொரு ஆழ்வாராகி விட்டது. இம்மரத்தை சுற்றிவந்து வழிபட்டால் நல்ல மார்க் பெறமுடியும் என்ற நம்பிக்கையோடு மாணவர்கள் வழிபடுகிறார்கள்.