பீர்க்கங்காய்

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டம¢ன்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.

இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்

பீர்க்கங்காய் நீர்ச்சத்து மிக்கது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்ட பீர்க்கங்காய், சிறுநீரை பெருக்கும் அற்புத மருந்து. கண் நோய்களை தீர்க்கும். உடல் எடையை குறைக்க கூடியது. அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடலுக்கு அதிக நன்மை கிடைக்கும். தோலை நீக்காமல் சமைக்க வேண்டும். நார்ச்சத்தை உடைய பீர்க்கங்காய் புற்றுநோயை தடுக்கும். நச்சுக்களை வெளியேற்றும். பீர்க்கங்காய் தோலை பயன்படுத்தி நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் உளுத்தம் பருப்பை லேசாக வறுக்கவும், பெருங்காயப்பொடி, பூண்டு, புளி, பீர்க்கங்காய் தோல், மிளகு பொடி, உப்பு சேர்த்து சட்னிபோல் தயார் செய்து சாப்பிடவும். இது மலச்சிக்கலை தடுக்கிறது
பீர்க்கங்காயை பயன்படுத்தி நீர்கடுப்பு, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். பீர்க்கங்காய் சாறு 50 மில்லி எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு, தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இது சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும். தேங்கிய சிறுநீரை வெளியேற்றும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், வலியை போக்கும். சிறுநீரகத்தின் ஆயுட்காலம் கூடும்.

* ஒரு குவளை பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அந்தி சந்தி என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை என்னும் நோய் மறைந்து போகும்.

* பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் உடனடியாக ரத்தக் கசிவைப் போக்கிக் காயத்தை ஆறச் செய்யும் பணியைச் செய்கின்றது.

* பீர்க்கங்காய் ஒன்றைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர்விட்டு அடுப்பேற்றி நன்றாகக் கொதிக்க வைத்து அதனோடு சுவைக்காகப் போதிய உப்பிட்டு அன்றாடம் காலை, மாலை என இரு வேளை பருகி வருதலால் வயிற்றினுள் பல்கிப் பெருகித் துன்பம் தருகின்ற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.

* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அரை டம்ளர் சாறுடன் போதிய சர்க்கரை சேர்த்து தினம் இருவேளை குடித்து வருதலால் ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டுதல் குணமாகும்.

* பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து- சேர்த்து தொழு நோய் எனப்படும் தோல் நோயின் மேலே பூசி வருதலால் தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும்.

* பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் வைத்து நன்றாக உலர்ந்த பின் இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வருவதால் இளநரை என்பது- தடை செய்யப்படுவதோடு தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.

* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியைச் சேகரித்து- நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை வெருகடி அளவுக்கு எடுத்து உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும். பீர்க்கங் கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர்விட்டு சுத்திகரித்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டு வருதலால் சீதபேதி குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும்.

* பீர்க்கங் கொடியின் இலை யைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறிவிடும்.

* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத் துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிகட்டிகள் குணமாகும்.

* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சர்க்கரையோ தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்த மேலீட்டால் வந்த காய்ச்சல் தணிந்து போகும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கம் கரைந்து போகும்.

* பீர்க்கங்காய்ச் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வருதலால் அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்னும் சத்தும் கிடைக்கப் பெற்று கண்பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும்.

*பீர்க்கங்காயில் உள்ள ரத்தத்தைப் தூய்மை செய்யக் கூடிய வேதிப்பொருள்களால் தோலின் மேலுள்ள முகப் பருக்கள் ஆகியன விரைவில் குணமாக ஏதுவாகின்றது.

*உடலின் மேலுள்ள துர்நாற்றத் தையும் போக்க வல்ல மருத்துவ குணத்தைப் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது. பீர்க்கங்காயை அன்றாடமோ அல்லது அடிக்கடியோ மற்ற காய்கறிகளோடு சமைத்து உணவாக உண்பதால் நோய் எதிர்ப்பு- சக்தியைத் தர வல்லதாக விளங்குகிறது.

*பீர்க்கங்காயில் புதைந்து இருக்கும் அதிக அளவிலான பீட்டா கெரோட்டின் என்னும் வேதிப்பொருள் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. பீர்க்கங்காயின் புதிய சாற்றை ஓரிரு சொட்டுக்கள் கண்களில் விடுவதால் கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் மண் கொட்டியது போன்ற உறுத்தல் ஆகிய குற்றங்கள் குணமாகும்.

* பீர்க்கங்காய் பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தைப் பெற்றிருந்தாலும் மானுடர்க்கு உதவும் பல்வேறு மகத்தான மருத்துவ குணங்களைப் பெற்று கண்கள், ஈரல்கள், தோல், சிறுநீரகம், இரையறை ஆகிய உறுப்புகள் ஆரோக்கியமாகவும், சீராகவும் இயங்க உதவுகிறது என்பதை அனைவரும் மனதில் இறுத்திப் பயன்பெறுவோம்.