பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சி

பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சி

நாம் பிறந்தது முதல் இறப்பது வரையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்கிறோம். பல விஷயங்களைப் பிறர் சொல்லிக் கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம்.
சிலவற்றை பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்கி றோம். இவை தவிர சிலவற்றை இயற்கையை உற்று நோக்கியும்கூட கற்றுக்கொள்கிறோம். புதிதாக ஒன்றைக் கற்றுத்தரும் ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!
கல்விக்கு குருவின் துணை மிக அவசியம். அதைவிடவும் ஞானத் தேடலில்- ஞானம் தேடிய பயணத்தில் ஒரு குரு மிக மிக அவசியம். பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு குரு கட்டாயமாகத் தேவை. இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல் வலியுறுத்துகிறது.
“ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.’
(திருமந்திரம்)
“மனம்’ என்பதை “ஆரியன்’ என்ற சொல்லால் திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த மனமானது மிக நல்லதாம். இந்த மனதிடம் இரண்டு குதிரைகள் உள்ளதாம்.
முதல் பாடலில் ஒரு குதிரை உண்டு எனக் கூறிய திருமூலர் அடுத்த பாடலிலேயே இரண்டு குதிரைகள் உள்ளதாகக் கூறுகிறாரே, இது என்ன முரண்பாடு என்ற கேள்வி எழுகிற தல்லவா? இங்கேதான் மூச்சு குறித்த அடுத்த சூட்சும ரகசியம் பொதிந்து கிடக்கிறது.
முதல் பாடலில் “குதிரை’ என்பது மூச்சு அல்லது பிராணனைக் குறிக்கிறது. இந்தப் பாடலில் அது நமது இடது நாசி, வலது நாசி ஆகிய இரண்டையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம். இதுவே இரண்டு குதிரைகள். அல்லது இடது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை எனவும், வலது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை மற்றொரு குதிரை எனவும் பொருள் கொள்ளலாம்.
பிராணன் என்பது ஒன்றுதானே? வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்க முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் இப்போது எழுந்திருக்கும். ஆம்; இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன. எனவேதான் திருமூலர் அதைப் பாகுபடுத்திக் காட்ட இரண்டு குதிரைகள் என்றார்.
நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.
ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர் கள் கணித்து வைத்துள்ளனர்.
நேரம் நாசி
-----------
காலை 6-8 மணி வரை வலது நாசி
காலை 8-10 மணி வரை இடது நாசி
காலை 10-12 மணி வரை வலது நாசி
மதியம் 12-2 மணி வரை இடது நாசி
மதியம் 2-4 மணி வரை வலது நாசி
மாலை 4-6 மணி வரை இடது நாசி
மாலை 6-8 மணி வரை வலது நாசி
இரவு 8-10 மணி வரை இடது நாசி
இரவு 10-12 மணி வரை வலது நாசி
இரவு 12-2 மணி வரை இடது நாசி
இரவு 2-4 மணி வரை வலது நாசி
அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக் கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
வலது நாசிக் காற்று (சூரிய கலை)
* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.
இடது நாசிக் காற்று (சந்திர கலை)
* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவற்றை அடக்கும் சூட்சுமம் எவருக்கும் தெரிவதில்லை என்பதையே இந்தப் பாடலின் இரண்டாவது வரி தெரிவிக்கிறது.
சுலபமான இயற்கையான மூச்சு
மூச்சின் சக்தியை அனுபவிக்க நாம் மூச்சுடன் ஒன்றி இருத்தில் வேண்டும்! அது எப்படி? இதோ அதற்கான உபாயம். மிக நீண்ட அல்லது மிகக் குறுகிய மூச்சுகளைத் தவிருங்கள். சாதாரண, இயல்பான, இயற்கையான மூச்சு போதும்.
இப்படி இயற்கையான, இயல்பான, சுலபமான மூச்சோடு நாம் ஒன்றியிருக்கும் போது, மெல்ல, மெல்ல எண்ணங்கள் குறைந்து, குறைந்து இறுதியில் மறைந்தே போகும்! மனம் வெற்று மனமாகும். அப்படி மனம் வெற்றிடமாகும் போது, அங்கு பிரபஞ்ச சக்தி வெள்ளமெனப் பாயும். நிரம்பி இருக்கும் இடத்தில் எதுவுமே புக முடியாது ஆனால் வெற்றிடத்தில் வெள்ளமெனப் பாயும், பிரபஞ்ச சக்தி! மனம் பேரொளியில் நிரம்பித் ததும்பி வழியும். அக்கணம்... நமது ’மூன்றாம் கண்’ திறந்து கொண்டு செயல்படத் துவங்கும். அந்த அற்புத அனுபவத்தில், நாம் நமது ஆத்ம விழிப்பை, அதன் சக்தியைப் பரிபூரணமாக உணர்ந்து அனுபவிக்கலாம்.
தியான விஞ்ஞானம்
---------------------
நம்து இரு புறக்கண்கள் போலவே அகத்திற்கென ஒரு கண் உண்டு. அதுவே நமது மூன்றாம் கண். நமது பெளதீக உடல் போலவே சூட்சும உடல் என்று ஒன்றுண்டு. புறக்கண்களும் பெளதீக உடலும் நமது உலகாய வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. உலகியல் உணர்வுகள் சார்ந்தது. ஆனால், நமது மூன்றாம் கண் பார்வை நமது ஆத்மசக்த்தியை, உள்ளே உறைந்திருக்கும் இறையை நமக்குக் காட்டிக் கொடுக்கும்! சூட்சும உடலோ நமது ஆன்மிக வாழ்வை நமக்கு அறிமுகப்படுத்தும். அப்போதுதான் நாம் உணர்வோம், நமது இத்தனை நாள் வாழ்வு வாழ்வல்ல! இப்போது காணும் வாழ்வே வாழ்வென்பதை! இத்தனை அற்புத அனுபவங்களும் இயல்பான சுவாசத்தை மட்டும் கவனிக்கும் ’ஆனாபானசதி’ தியானத்தால் மட்டுமே சாத்தியம்! சாத்தியம்!!
இவ்வாறாக நாம் நமது முழு மற்றும் சிதறாத கவனத்தை, மூச்சின் மேல் செலுத்தும்போது அதுவே தியானம் என்றழைக்கப்படும் ’தவம்’ ஆகிறது. இத்தியானத்தைத் தொடர்ந்து பழகும்போது நாம், ஆன்மிக விஞ்ஞான தியானத்தில் சிறந்த, பரிபூரணமாகிறோம், பரிபக்குவ நிலையை, அதாவது முழுமையை அடைகிறோம்.
ஆன்ம விஞ்ஞானம்
--------------------
தியானத்தின் மூலமாக நாம் நமது கடந்த மற்றும் எதிர் காலங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். நமது கடந்த காலத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்வதால், நாம் பல பிறவிகள் தாண்டி வந்திருப்பதை உணர்கிறோம். உயர்ந்த / தாழ்ந்த மற்றும் பல பிறவிகளைக் கடந்து வந்திருப்பதை உணர்கிறோம்.
எனவே, மாறி மாறி எடுத்த உடல்கள் பெரிதல்ல. மாறாமல் நம்முடனே வந்து கொண்டிருக்கும் ஆன்மாவே பெரிதென்று அறிகிறோம். "அயமாத்மா ப்ரம்மா" "அஹமாத்மா ப்ரம்மா" "தத்வம்ஸி" (நான் பிரம்மனாக இருந்தேன்.. நானே பிரம்மனாக இருக்கிறேன்.. நானே பிரம்மா) என்று படிப்படியாக உள்ளே உறைந்திருக்கும் இறை உணரும் செயல் நடக்கிறது என்பதை அறிகிறோம். ’நாமே எல்லாம்’, நாம் அழிவற்றவர்கள் என்பதை உணர்கிறோம். பல்வேறு பிறவி பெளதிக உடல்களின் இறப்பு நிகழ்ந்தாலும், மாறாத ஆன்மாவின் வளர்ச்சியே நமது உண்மையான வாழ்வென்பதை அறிகிறோம்!
இப்பாடமே 'ஆன்ம விஞ்ஞானம்' என்பதாகும்.
ஆன்மிகம்
-----------
சுவாச சக்தி மூலமாக நாம் தியான விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்கிறோம். தியான சாஸ்திரம் என்பது அதுவே. அந்த தியான சாஸ்திரம் மூலமாகவே நாம் ஆன்ம சாஸ்திரம் என்கிற ஆன்ம விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்கிறோம்.
ஆன்ம விஞ்ஞானத்தை நன்கு கிரகித்துக் கொண்ட பிறகே நாம் நமது தினசரி வாழ்வு பற்றியும், வாழ்தல் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படைக் கூறுகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்... எப்படிப் பேசுவது... எப்படி சாப்பிடுவது... எப்படி வளர்வது... எப்படி தொடுவது.. எப்படி நடப்பது... இப்படி தினசரி நாம் செய்யும் பல செயல்களைப் பற்றி சரியாகப் புரிந்து அதன்படி நடக்க முடியும். இதுநாள்வரை இதெல்லாம் செய்திருக்கிறோம் தான்! ஆனால் அதன் நுணுக்கங்கள்... சரியான வழிமுறைகள் பற்றித் தெரிந்து கொள்ள ’ஆன்ம விஞ்ஞானக் கற்றல்’ மிக மிக அவசியம்!
இதுதான் ’பரிபூரண பரிபக்குவத் தன்மை’ (Enlightenment) அதாவது முழுமை (Perfection) இதைத்தான் ’ஆன்மிகம்’ என்கிறோம்.