வர்மக்கலை பற்றிச் சில தகவல்கள்

வர்மக்கலை பற்றிச் சில தகவல்கள்

உடலில் உள்ள தசைகள், எலும்புகள், மூட்டுகள், ரத்தக் குழாய்கள் இவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகளும், அவற்றின் நரம்பு முடிச்சுகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் இடங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன. அந்த இடங்களில் சிறு அடிப்பட்டாலும், அப்பகுதி மட்டுமோ அல்லது உடல் முழுவதுமோ இயக்கங்கள் பாதிக்கப்பட்டு நோய் நிலையை ஏற்படுத்துவதையே வர்மம் கொண்டுள்ளது என்கிறார்கள். அந்த இடங்களை வர்ம நிலைகள் என்றும் அழைக்கப்படுகிறது.வர்ம நிலைகளில் அடிபடும்போது, சிறு வெளிக்காயமும் இல்லாமல் சாதாரண வலி முதற்கொண்டு இறப்பு வரை ஏற்படும் அளவுக்கு அவை முக்கியத்துவம் பெறுகிறது.

வர்மம் என்பதற்கு ஜீவன்,காலம், காற்று, சுவாசம், ஆவி, கலை, உயிர், ஒளி, பிராணன், யோகம், வாயு எனப் பல பொருள்கள் உண்டு. மனித வாழ்வின் தொடக்கத்தில், காட்டு மிருகங்களிடம் இருந்தும்,பிற மனிதர்களிடம் இருந்தும் தற்காத்துக்கொள்ள, போரிடும் பல முறைகளையும்,தற்காப்புக் கலைகளையும் பின்பற்ற நேரிட்டது. அந்த வகையில் தோன்றிய கலைகளில் ஒன்றுதான் வர்மக் கலை, மனித உடல் அமைப்பையும் உள்ளத்தையும் பற்றிய தங்களின் பேரறிவைக் கொண்டு போர்க் கலையையும் மருத்துவத்தையும் இணைத்து வர்மக் கலை எழுதியுள்ளனர் நமது சித்தர்கள்.
வர்மங்களை படு வர்மம்,தொடு வர்மம்,தட்டு வர்மம்,தடவு வர்மம்,நோக்கு வர்மம்,நக்கு வர்மம்,சர்வாங்க வர்மம்,உள் வர்மம் என பல வகைகளாக பிரித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். எனினும், படு வர்மம் பன்னிரண்டும், தொடுவர்மம் தொண்ணூற்றாறும் பொதுவாக அறியப்படுபவை.

வர்மம் கொள்ளுதல் என்பது அதைத் தெரிந்தவர் பயன்படுத்தும் முறையில் மட்டுமின்றி அறியாமல் அடிபடுதல், கீழே விழுதல் போன்றவற்றாலும் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அடிபட்ட இடத்தில் வியர்வை,சில்லிட்டுப் போதல்(கரண்ட அடிப்பதுபோல்), மூச்சுவிட இயலாமை போன்றவை ஏற்படலாம். நாடித் துடிப்பிலும் மாற்றங்கள் ஏற்படலாம். இவ்வாறு அடிப்பட்டவர்ளை அமர்த்தி, தட்டி, தடவி,தூக்கி அவர்களை குண்ப்படுத்தும் முறையை அடங்கல் என்று சொல்வார்கள். இவ்வாறு வர்மம் அடங்கல் செய்தபிறகு.சுக்கைத் தூளாக்கி காதிலும் மூக்கிலும் லேசாக ஊதுவார்கள். வர்ம அடங்கலுக்கு வேலிப்பருத்தி, வல்லாரை போன்ற மூலிகைகளும் பயன் படுத்துப்படுகின்றன.

பொதுவாக வர்ம முறைகள் மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டாலும், அதன் தீய விளைவுகளுக்கு அஞ்சி, பிறருக்குச் சொல்லித் தருவதில், அதை கற்றுத் தெரிந்தவர்கள் தயக்கம் காட்டியதால் படிப்படியாக மறைந்து இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் மட்டுமே இக்கலை பயன்பாட்டில் இருக்கிறது.

மனித உடல் அமைப்பும் அதில் உள்ள நாடிகள், நரம்புகள்,நரம்பு முடிச்சுகள், உடலின் ஒவ்வோர் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் பகுதிகள் இவற்றைப் பற்றி ஆழ்ந்த அறிவுடைய சித்தர்கள் தாங்கள் அறிந்தவற்றை பாடல்களாக எழுதிவைத்தனர். வர்ம நூல்கள் வர்மத்தை விளக்கும்பொழுது உடலையும் உயிரையும் இருவகை அமைப்பாகக் கொள்கின்றன.

உடற்கலை- மெய், வாய், கண், மூக்கு, செவி, இடகலை, பிங்கலை, சுழுமுனை
உயிர்கலை - மலம்,சிறுநீர்,சுக்கிலம்,கருவிழி இவற்றை கட்டுப்படுத்தும் பிரதான நரம்புகள்.

உடற்கலையில் உள்ள எட்டு அமைப்புகளும், உயிர்கலையில் உள்ள நான்கு அமைப்புகளும் மொத்தும் பன்னிரெண்டும் சேர்ந்து படுவர்மம் என்றும், அவற்றின் வழித்தோன்றலாக ஒவ்வொரு படுவர்மமும் ஆறாகத் பகுத்து தொடுவர்மம் உண்டாகிறது என்று சொல்வார்கள்.

‘படு’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு ‘அதி’ அல்லது ‘அதிக’ என்று பொருள் ‘படும்’ என்றால் ‘வேகம்’ என்று பொருள் ஆக படுவர்மம் என்றால் அதிக வேகம் என்று பொருளாகும். அதிக ஆபத்துகளை உண்டாக்கும் உயிர்நிலைகளை படுவர்மம் எனப்பட்டன. இவற்றில் அடிப்பட்டால் உயிரிழப்போ, உணர்வு இழப்போ, கருவிழி மேல் நோக்குதலோ உண்டாகலாம்.மலம்,சிறுநீர் போகமால் அடைத்தல், விந்து வெளியேறுதல் போன்றவை அசாத்திய அறிகுறிகளாகும். ஒவ்வொரு வர்மத்துக்கும் ஒரு குறிப்பிட்ட இளக்கும் காலம் உண்டு அதற்குள் அடங்கல் என்னும் இளக்கும் முறையாகிய முதல் உதவியை செய்யவேண்டும் இல்லையென்றால் உயிருக்கே அபத்து ஏற்படலாம்