அங்கீகாரமற்ற வீட்டு மனை வரைமுறை - தமிழக அரசு புதிய விதிமுறைகள்

அங்கீகாரமற்ற வீட்டு மனை வரைமுறை - தமிழக அரசு புதிய விதிமுறைகள்



தமிழக அரசு இன்று (மே 5, 2017) அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டது. அது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பிறப்பித்துள்ள அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்குமுறை விதிமுறை -2017 உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், டவுன் பஞ்சாயத்தில், செயல் அதிகாரியும், கிராம பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் இந்த நிலங்களை வரையறை செய்யும் தகுதியான அதிகாரிகள் ஆவார்கள்.

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களும், நிலத்தின் உரிமையாளர்களும் இந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து, தங்களது நிலத்தை வரையறை செய்து கொள்ளலாம்.

இந்த நிலங்கள் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும். இந்த நிலங்களை வரையறை செய்வதற்காக உரிய கட்டணத்தை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும்.

அதன்படி, மாநகராட்சி பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 வீதமும், நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 60 என்றும் கிராம பஞ்சாயத்துக்களில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 30 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத இந்த வீட்டு மனைகளில் மேம்படுத்துவதற்கு என்று தனி கட்டணமும் செலுத்த வேண்டும். மேம்பாட்டு கட்டணமாக, மாநகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 600, சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 350, முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 250, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.150, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 100 என்றும் செலுத்த வேண்டும்.